Sunday, 12 January 2014

லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன் - வா. மணிகண்டன்

இணைய வாசகர்களுக்கு அறிமுகம் செய்ய அவசியம் இல்லாத நண்பர் வா. மணிகண்டன் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பான “லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன்” வாங்கி வந்த உடனே படித்து முடித்து விட்டேன். மணிகண்டனின் வேகமான நடை மற்றும் மூன்று பக்கங்களுக்கு மிகாத கதைகள் அதற்கு உதவின என்பதும் உண்மை. திரைப்படங்கள் மட்டும்தான் வெளியான உடனே பார்த்து விமர்சனம் செய்ய வேண்டுமா என்ன?

நானும் பெங்களூர் அருகே ஓசூரில் படித்தவன் என்பதாலும் பெருந்துறை, கவுந்தப்பாடி பகுதிகளில் என் வேர்கள் என்பதாலும் நிறைய கதைகளை மிகவும் அருகில் உணர முடிந்தது. பெரும்பாலும் இந்தப் பகுதிகளில்தான் இவரது கதைகள் சுற்றி வருகின்றன.

முதல் கதையான “சாவதும் ஒரு கலை” படித்து முடிக்கும்போதே நம்மை நிமிர்த்தி உட்கார வைத்து விடும். அந்தப் பெண் இறந்தாளா இல்லையா என்பதற்கான முடிவை நாம் தட்டுத் தடுமாறி எடுக்க வேண்டி இருக்கிறது. கதைகள் ஒரு எள்ளலான நகைச்சுவை உணர்வோடு சுண்டி இழுக்கும் ஒரு நடையில் இருக்கின்றன. வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் செல்லும் சம்பவங்களில் நம் முகத்தில் ஒரு சிறு புன்னகையைப் படர விடும் வேளையில் நம் புன்னகையை உறையவைக்கும் முடிவொன்றை நம் முகத்தில் அடிக்கும் கதைகளும் உண்டு. இதனால் சற்றே சிரிக்க வைக்கும் கதைகளையும் கொஞ்சம் எச்சரிக்கையாகவே அணுக வேண்டி இருக்கிறது. “நந்தினியின் வீட்டில் விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது” இந்த வகையைச் சேர்ந்த கதைதான்.

அடுத்ததாக துலுக்கன் கதை. அந்த மதத்தைச் சேர்ந்த யாரும் இல்லாவிட்டாலும் எதற்கு அந்தப் பெயர் என்ற கேள்விக்கு அதனால்தான் அந்தப் பெயர் என்ற விடையாக கதை அவிழ்வது அபாரம். அசைவுறாக் காலம் கதை நம்மை அசைத்துப் பார்க்கும் ரகம். தூர்தர்ஷன் பாத்திமா பாபுவில் தொடங்கி, ஜெயா டிவி பாத்திமா பாபுவில் முடிவடைவது அழகான ஒரு காலத்தின் குறியீடு.

ஒரு குழந்தை அழுது கொண்டிருக்கிறது என்ற கதை நம்மை சற்றே சில்லிட வைக்கும். அறியாத மனிதர்களுக்கு எங்கோ கொடுமைகள் நடக்கையில் நாம் பெரிதாக அலட்டிக் கொல்வதில்லை, ஆனால் அதுவே நாம் அறிந்தவர்களுக்கு நடக்கும்போது பதறுவது மனித இயல்பு. கடைசியாக முடிக்கும் போது புதரில் இறந்து கிடந்த குழந்தை கதையில் வந்த குழந்தையாக இருக்குமோ என்ற கேள்வியை நம் மனதில் ஏற்படுத்திவிட்டுப் பிறகு அது எந்தக் குழந்தையாக இருந்தால் என்ன? பத்து மாதக் குழந்தை புதருக்குள் எறும்பு தின்னக் கிடந்தால் வேதனைப்படுவதை விட்டு என்ன ஆராய்ச்சி வேண்டி இருக்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறார். இது நுட்பமானது.

படிப்பவர்களை சிரமப்படுத்தாத நட்பான ஒரு எழுத்து நடை இவருக்கு இயல்பாகவே வாய்த்திருக்கிறது. இது அவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு. இது வெறும் ஆரம்பமே என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

நன்றி,  ஷான் ( https://www.facebook.com/photo.php?fbid=10152580341789546&set=a.127846894545.130400.528129545 )

இணையத்தில் வாங்க...


No comments:

Post a Comment