Friday, 31 January 2014

குஜராத் இந்துத்துவம் மோடி - மருதன்

உண்மையில் இந்த புத்தகத்தைப் பற்றி புத்தகக் கண்காட்சி நடந்த சமயத்தில் எழுதியிருக்க வேண்டும். ஆனால், இது காலதாமதமான பதிவு அல்ல என்பதால் பகிர்கிறேன்.

ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியில் ஒரு நாயகன் அல்லது தலைப்பு இருக்கும். ஓபாமா, பிரபாகரன், அமெரிக்கா, ஈழம் போன்ற தலைப்பில் எல்லா பதிப்பகங்களும் புத்தகக் கண்காட்சிக்கு புத்தகம் கொண்டு வருவார்கள். இந்த வருடம் சென்னை புத்தகக் கண்காட்சியின் நாயகன் பா.ஜ.க பிரதமர் வேட்பாளரான ’மோடி’ தான். பல பதிப்பகங்கள் மோடிக்கு ஆதரவாகவும், எதிராகவும் புத்தகங்கள் போட்டிருந்தனர்.

கிழக்கு பதிப்பகம் மட்டும் குஜராத், மோடி தலைப்புகளில் நான்கு புத்தகங்கள் கொண்டு வந்திருந்தார்கள். அதில் என்னை கவர்ந்த புத்தகம் மருதன் எழுதிய ”குஜராத் இந்துத்துவம் மோடி” 




மோடியைப் பற்றி வந்த அனைத்து புத்தகங்களுமே மோடியை பற்றி கிடைத்த தகவல், விமர்சனம், செய்தி வைத்து எழுதியிருக்கிறார்கள். ஆனால், மருதன் இந்த புத்தகத்திற்கு குஜராத் வரை சென்று அங்கு பார்த்து, தெரிந்துக் கொண்ட உண்மையை எழுதியிருக்கிறார். மோடியை ஆதரிக்கும் கிழக்கு பதிப்பகத்தின் உரிமையாளரான Badri Seshadriவெளியிட்டுயிருப்பதும், மோடிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் Haran Prasanna விற்பனை செய்வதும் கூடுதல் சிறப்பு.

மோடியின் வளர்ச்சியின் மாடல் பணக்காரர்களுக்கு மட்டும் தான் என்பதும், அவருடைய ஆரம்பக்கட்ட வரலாறு ஹிட்லர், முசோலினிக்கு நிகராக இருப்பது, இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்லாமல் தலித்துகளுக்கும் மோடி எதிரி போன்ற பல கருத்துக்களை ஆதரங்களுடன் பதிவு செய்திருக்கிறார்.

பிற்படுத்தப்பட்டோர்களின் எதிராக தொடரும் வன்முறையில் குஜராத் இரண்டாவது மாநிலமாக இருப்பதும், கையால் மலம் அள்ளும் கலாச்சாரம் குஜராத்தில் இருப்பதையும் மேற்கோள் காட்டுகிறார்.

குறிப்பாக, மோடியை பற்றி மருதையன் அவர்கள் கூறிய கருத்து மிகவும் முக்கியம்.

”மோடி இஸ்லாமியர்களின் எதிரி என்று சொல்வது தவறு. இஸ்லாமிய எதிரியாக இருப்பதைத் தான் மோடியும் விரும்புகிறார். அப்படியென்றால், அவர் இந்து , கிறிஸ்துவர்களுக்கு நண்பனா ?” என்ற கேள்வியை எழுப்புகிறார்.

ஹிட்லர் யூதர்களின் எதிரி என்பதால், அவர் ஜெர்மனியர்களுக்கு நண்பன் என்று அர்த்தமில்லை. அதேப் போல் தான் மோடியும்.

சமீபத்தில் குஜராத்துக்கு சென்ற மோடி ஆதரவாளரான பத்ரியும் ”மின்சாரம் ஒன்றை தவிர குஜராத் மாநிலம் தமிழ்நாட்டை விட பல விஷயங்களில் பின் தங்கியிருப்பதை” பதிவு செய்திருக்கிறார்.

மோடியின் ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் அவசியம் படிக்க வேண்டிய நூல். இதில், இருக்கும் தகவல்கள் களத்தில் சென்று கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள். இதை மறுக்க நினைக்கும் மோடி ஆதரவாளர்கள் தனி புத்தகம் போடுவதற்குள் தேர்தல் நெருங்கிவிடும்.

 Marudhan Gangadharan களப்பணிக்கும், முயற்சிக்கும் என் வாழ்த்துக்கள் !!!

நன்றி : குகன் ( https://www.facebook.com/photo.php?fbid=815915201757895&set=a.284708604878560.88791.100000182679724 )

இணையத்தில் வாங்க...
http://www.wecanshopping.com/products/குஜராத்-இந்துத்துவம்-மோடி.html

Saturday, 18 January 2014

பெரியார் ரசிகன் - குகன்

நீங்கள் நாத்திகரோ ஆத்திகரோ பிரச்சினையில்லை. தமிழர் என்றால் உங்களுக்கு பெரியார் தவிர்க்க முடியாதவர். நாத்திகர்கள் பலரும் பெரியாரை கடவுளாக்கி வழிபட ஆரம்பித்துவிட்டார்கள் என்றால், ஆத்திகர்கள் பெரியாரின் தாக்கத்தால் அடையாளச் சிக்கல் அவஸ்தையில் அலைக்கழிக்கப் படுகிறார்கள்.



இந்த சுவாரஸ்யமான முரணை களமாக்கி நாவல் ஆக்கியிருக்கிறார் Guhan Kannan

எம்.ஜி.ஆர் ரசிகன், சிவாஜி ரசிகன், ரஜினி ரசிகன், கமல் ரசிகன், விஜய் ரசிகன், அஜீத் ரசிகன் என்று கேள்விப்பட்டிருப்போம். இந்நாவல் பெரியார் ரசிகனைப் பற்றியது. பெரியாருக்கு தொண்டர்தான் உண்டு. ரசிகன் இருக்க முடியுமா என்று கேட்டால் ஏன் இருக்கக்கூடாது என்கிற கேள்வியை எழுப்பி, சுவாரஸ்யமான சமகால வரலாற்றை புனைவில் முயன்றிருக்கிறார் குகன்.

இளம் தலைமுறை எழுத்தாளர்களின் இம்மாதிரியான துணிச்சலான முயற்சிகள்தான் எதிர்கால தமிழ் இலக்கியத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கிறது. எழுத்துப்பிழை, எடிட்டிங் பிரச்சினைகள் உள்ளிட்ட சில குறைகளை களைந்துப் பார்த்தால் ‘பெரியார் ரசிகன்’ குறிப்பிடத்தக்க சமீபத்திய நாவல்களில் ஒன்று.

நன்றி : யுவகிருஷ்ணா ( https://www.facebook.com/photo.php?fbid=10203079572257225&set=a.10201891742002211.1073741826.1443523801 )

இணையத்தில் வாங்க...

Tuesday, 14 January 2014

ஆண்பால் பெண்பால் - தமிழ்மகன்

தமிழ்நாட்டில் தமிழர்களை விட அதிகமாக வசிக்கும் இனம் ஒன்று உண்டு. இவர்களை ‘எம்.ஜி.ஆர் பைத்தியங்கள்’ என்றும் சொல்லலாம். ‘எம்.ஜி.ஆர் ரசிகர்கள்’ என்றும் சொல்லிக் கொள்ளலாம். ‘பைத்தியம்’ என்பதே சரியென்று ‘ஆண்பால், பெண்பாலை’ வாசிக்கும்போது தோன்றுகிறது. நானும் கூட அந்தப் பைத்தியங்களில் ஒருவன்தான் என்பதை பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன்.

‘பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கும்... ஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும்’ தமிழ்மகனால் சமர்ப்பிக்கப்பட்ட இந்நூல், எவ்வகையில் அந்த சமர்ப்பணத்தை நியாயப்படுத்துகிறது என்பது, இறுதி அத்தியாயம் வரை நீளும் சஸ்பென்ஸ்.

‘யாரோ எழுதிய இந்த நாவலில் மிகுந்திருக்கும் அதிகப்படியான குழப்பங்கள் குறித்து என்னுடைய விளக்கம்’ என்று நாவல் தொடங்குவதற்கு முன்பாகவே பதினாறு பக்க படா நீளமான விளக்கம் ஒன்றினை தருகிறார் தமிழ்மகன். உண்மையில் இந்த விளக்கம்தான் குழப்புகிறதே தவிர, நாவல் தெளிவான நீரோடையாகவே பாய்ச்சல் கொள்கிறது. இந்த நாவலை எழுதியது நானல்ல என்று வாக்குமூலம் கொடுக்கிறார் நாவலாசிரியர். அதற்கேற்ப நாவலின் முதல் பாகம் ‘பிரியா சொல்வதாக பிரமிளா எழுதியது’ என்றும், இரண்டாம் பாகம் ‘அருண் சொல்வதாக ரகு எழுதியது’ என்றும் இருக்கிறது. நாவலை எழுதியவர் தமிழ்மகனல்ல என்றால் யாருக்கு ராயல்டி தருவது என்று முன்னுரைக்கு வந்து குழம்புகிறார் மனுஷ்யபுத்திரன். இவ்வாறாக கதை தொடங்குவதற்கு முன்பாக நடக்கும் புதிர் விளையாட்டே சுவாரஸ்யத்துக்கு சுழி போடுகிறது.

இந்நாவலில் சொல்லப்படும் முதலிரவு, பர்ஃபெக்டான முதலிரவு. இதுவரை ‘அந்த’ அனுபவம் இல்லாத இருவர் தனித்து இரவைக் கழிப்பதில் எதிர்கொள்ளும் சங்கடங்கள். அங்கே நடக்கும் சிறு சிறு அசைவுகளையும் கூட ஆண்மனம் எதிர்கொள்வதற்கும், பெண்மனம் எதிர்கொள்வதற்குமான வேறுபாடுகள் என்று நுட்பமான சித்தரிப்புகளில் கவர்கிறார் தமிழ்மகன்.

‘நாம் எதை அடைய விரும்புகிறோமோ, அதுவாகவே மாறிப்போய் விடுகிறோம்’ என்று காந்தியோ, காப்மேயரோ அல்லது யாரோ சொல்லியிருக்கிறார்கள். ‘நாம் எதை அதிகமாக வெறுக்கிறோமோ, ஒருகாலத்தில் அதை நேசிக்க ஆரம்பித்துவிடுவோம்’ என்று இந்த கதையைப் படித்தால் உணர்ந்துக் கொள்ள முடிகிறது. நாயகி ப்ரியாவுக்கு எம்.ஜி.ஆர் என்றால் உயிர். நாயகனுக்கும் சரி. நாவலாசிரியருக்கும் சரி, அவர் வேப்பங்காய். ஆனால் பாருங்கள். ப்ரியா பைத்தியம் பிடித்து எம்.ஜி.ஆர் தமிழர் என்று நிரூபிக்க எங்கெல்லாம் பயணிக்கிறாளோ, என்னவெல்லாம் செய்கிறாளோ.. அத்தனையையும் நாவலாசிரியர் செய்திருக்கிறார். இவரே கும்பகோணத்துக்கு போயிருப்பார். எம்.ஜி.ஆர் படித்த பள்ளி, பிரசாதம் வாங்கிச் சாப்பிட்ட கோயில் என்று எல்லாவற்றுக்கும் சென்றிருக்கிறார். எம்.ஜி.ஆரின் மூதாதையர்கள் பற்றிய குறிப்புகளை ஆவணக் காப்பக அலுவலகங்களுக்கு சென்று தேடியிருக்கிறார். ஆனால் பிரியாவுக்கு மட்டும் மனநிலை சரியில்லை என்று காதுகுத்துகிறார். எனக்கென்னவோ ப்ரியாவை விட பெரிய எம்.ஜி.ஆர் பைத்தியமாக தமிழ்மகனைதான் நினைக்கத் தோன்றுகிறது.

ஒரு இளம்பெண்ணுக்கு வெண்குஷ்டம் வருகிறது. இதையடுத்து இயல்பாக தோன்றும் தாழ்வு மனப்பான்மை. மனச்சிதைவு. அதன் வாயிலாக அப்பெண்ணுக்கு தோன்றும் மாயத்தோற்றங்கள். திருமணக் குழப்பங்கள், இறுதியில் விவாகரத்து, மனநோய் காப்பகம் என்று போகிறது கதை.

இந்தக் கதைக்கு ரோஷோமான் பாணியில் கதை சொல்லும் வடிவத்தை அமைத்திருக்கிறார் ஆசிரியர். முதல் பாகம் முழுக்க சொல்லப்படும் அதே கதைதான், இரண்டாம் பாகத்திலும். அதே காட்சிகள், கிட்டத்தட்ட வசனங்களும் கூட அதே. விருமாண்டி மாதிரியேதான். விருமாண்டியிலாவது கேமிரா கோணங்களில் வித்தியாசம் காட்டமுடியும். இது அச்சில் இருக்கும் நாவல். இங்கேதான் தமிழ்மகனின் சாமர்த்தியம் மிளிருகிறது. ஒரே கதையை திரும்பப் படிக்கும் அலுப்பு சற்றுக்கூட ஏற்பட்டுவிடாத வகையில் மொழியை லகான் பிடித்து கட்டுப்படுத்துகிறார்.

இரண்டு பாகங்களுக்கும் தலா இருபது அத்தியாயங்கள். இருவருக்கும் மனப்பிளவு மனநோயின் காரணமாக என்றே முப்பத்தி ஒன்பதாவது அத்தியாயம் வரைக்கும் நினைத்துக் கொண்டிருக்க, ஒரே ஒரு பத்தியில் போகிறபோக்கில் கொளுத்திப்போடும் ஒரு மேட்டரில் கதையின் ஆதாரத்தன்மையே யூ டர்ன் அடிக்கிறது. மிக முக்கியமான இந்த சஸ்பென்ஸை கூட வெளியீட்டுவிழாவில் ஒரு பெண்கவிஞர் சூறைத்தேங்காய் உடைப்பது மாதிரி போட்டு உடைத்துவிட்டார். மனம் பிறழ்ந்த பெண் மனம், பெருந்தன்மையான ஆண் மனம் என்று ஆணாதிக்கப் பார்வையில் கதை எழுதிவிட்டாரே தமிழ்மகன் என்று ஆரம்பத்தில் ஏற்பட்ட கோபம் முழுக்க இறுதியில் கரைந்து, உருகிப் போய்விடுகிறது.

பெண்கள் எம்.ஜி.ஆரை ரசிப்பது உடல்சார்ந்த ஈர்ப்பின் காரணமாகதான் என்று பொதுவான ஒரு அபிப்ராயம் உண்டு. ஒரு ஆண் எம்.ஜி.ஆரை எப்படிப் பார்க்கிறானோ, அதே மாதிரி இயல்பான ரசனைதான் பெண்ணுடையதும் என்பதை பிரச்சாரநெடி இல்லாமல் சொல்லியிருப்பது சிறப்பு. அதே மாதிரி காமம் என்கிற ஒற்றை விஷயத்தை அணுகுவதில் ஆண், பெண் இருவருக்குமான 360 டிகிரி கோணத்தையும் இண்டு, இடுக்கு விடாமல் அலசித் துவைத்திருப்பது, நாவலாசிரியரின் நீண்டகால அனுபவத்தை(?) வெளிப்படுத்துகிறது. ஒரு கட்டத்தில் கதையில் தமிழ்மகனே ஒரு பாத்திரமாக வருகிறார். நாயகன் இவரை போற்றுகிறார் (செக்ஸ் பத்தி நல்லா எழுதறாரு). நாயகி இவரை வெறுக்கிறார் (அந்தாளுக்கு எம்.ஜி.ஆரை பிடிக்காது).

முதல் பாகத்தில் ஒருவரும், இரண்டாம் பாகத்தில் அடுத்தவருமாக இரண்டே பேர் இருநூற்றி ஐம்பது பக்கத்துக்கும் மேலாக பேசிக்கொண்டிருந்தால் போர் அடிக்காதா? அதிலும் வசனங்கள் மிகவும் குறைவு. போர் அடிக்கவேயில்லை என்று நான் வேண்டுமானால் கற்பூரம் அடித்து சத்தியம் செய்கிறேன். சரியான மொழிநுட்பத்தை கைகொண்டால் எவ்வளவு வறட்சியான விஷயங்களையும் எப்படி வெகுசுவாரஸ்யமாக்க முடியும் என்பதை இந்த நாவல் மூலம் அறிந்துகொள்ளலாம்.

‘ஆண்பால், பெண்பால்’ ஒரு குடும்பக் கதை. அதில் அரசியல் இருக்கிறது. வரலாறு இருக்கிறது. ஒரு நாவல் இலக்கியமாக கதை மட்டும் போதாது, நல்ல களத்தையும் அடையாளம் காணவேண்டும் என்று பாடமெடுத்திருக்கிறது இந்நாவல். தமிழ்மகனின் முந்தைய சூப்பர் ஹிட் ‘வெட்டுப்புலி‘’’’க்கு முற்றிலும் மாறுபட்ட கதை என்றாலும், அது பாய்ந்தது எட்டு அடி, இது பாய்ந்திருப்பது முப்பத்தி இரண்டு அடி.

நன்றி : யுவகிருஷ்ணா 

இணையத்தில் வாங்க....
www.wecanshopping.com

Monday, 13 January 2014

மண்ட்டோ படைப்புகள்

ஒரு எழுத்தாளன் வாழ்வாதாரத்திற்கு வணிக ரீதியாக என்ன தான் எழுதி கூவித்தாலும், தான் எழுத்தாளனாக வாழ்ந்ததிற்கு பல ஆண்டுகள் தன் பெயரை பேசுவது போன்ற ஒரு படைப்பிலக்கியத்தை படைக்க வேண்டும் என்பது கனவாக இருக்கும். அப்படி படைப்பிலக்கியத்தை படைத்து என்ன சாதித்துவிட போகிறோம் என்பவர்களுக்கு சாதித்துக் காட்டிய மண்ட்டோவின் படைப்புகள் எடுத்துக்காட்டாக இருக்கும்.



இந்திய – பாகிஸ்தான் பிரிவினை முன் பிறந்த படைப்பாளியான மண்ட்டோ, அரசியல் சூழ்நிலையால் பாகிஸ்தான் நாட்டை தேர்ந்தெடுக்க வேண்டியதாக இருந்தது. பிரிவினை முன்பு 3 முறையும், பிரிவினை பிறகு பாகிஸ்தானில் 3 முறையும் தனது படைப்புக்காக சிறை சென்றவர்.

பிரிவினைப் போது ஏற்ப்பட்ட வலியும், வேதனைகள் மட்டுமல்லாமல், வன்முறையில் ஈடுப்பட்டவர்களின் குற்றவுணர்வையும் தனது படைப்பின் பிரதிபலித்திருக்கிறார்.

“என் கதைகளை உங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றால் நம்முடைய காலத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றே அர்த்தம். என்கதைகளில் எந்தத் தவறும் இல்லை” என்கிறார் மண்ட்டோ. தன் படைப்பு மீது இப்படி ஒரு நம்பிக்கை வைத்திருக்கிறார்.

ஒவ்வொரு கதையை கனத்த இதயத்தோடு கடந்து சென்று அடுத்த கதையை சென்றேன். ஒவ்வொரு கதைகளிலும் ஐம்பது வருடக் காலக்கட்டத்தை நினைவுப்படுத்தவில்லை. இப்போதுக் கூட பொருந்தும் வகையாக சம்பவங்களை நினைக்க வைக்கிறது.

நண்பர் Prince Ennares Periyar “திற" ( Open it) என்ற மண்ட்டோவின் சிறுகதையை மையமாக வைத்து ஒரு குறும்படம் எடுத்திருக்கிறார். இந்திய – பாகிஸ்தான் பிரிவினைக்கு பதிலாக குஜராத் இனக் கலவரத்தை களமாக மாற்றியிருக்கிறார். காலங்கள் மாறினாலும், பின்னனி மாறினால் மனிதனுக்கு இருக்கும் மிருக குணமும், அதனால் மற்றொரு மனிதனுக்கு ஏற்படும் வலியும் மாறுவதில்லை என்பதை இந்த குறும்படம் சொல்கிறது. 

சர்ச்சை செய்து விளம்பரம் தேடிக் கொள்ளும் படைப்பாளிகளின் படைப்பு சில நாட்களிலே நீர்த்து போகும். ஆனால், மண்ட்டோ போன்றவர்களின் படைப்புகள் இன்னும் ஐம்பது வருடங்களுக்கு மேல் இருக்கும். விவாதிக்கப்படும்.

இணையத்தில் வாங்க.. 

நன்றி : குகன் (https://www.facebook.com/photo.php?fbid=805356212813794&set=a.284708604878560.88791.100000182679724)

Sunday, 12 January 2014

லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன் - வா. மணிகண்டன்

இணைய வாசகர்களுக்கு அறிமுகம் செய்ய அவசியம் இல்லாத நண்பர் வா. மணிகண்டன் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பான “லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன்” வாங்கி வந்த உடனே படித்து முடித்து விட்டேன். மணிகண்டனின் வேகமான நடை மற்றும் மூன்று பக்கங்களுக்கு மிகாத கதைகள் அதற்கு உதவின என்பதும் உண்மை. திரைப்படங்கள் மட்டும்தான் வெளியான உடனே பார்த்து விமர்சனம் செய்ய வேண்டுமா என்ன?

நானும் பெங்களூர் அருகே ஓசூரில் படித்தவன் என்பதாலும் பெருந்துறை, கவுந்தப்பாடி பகுதிகளில் என் வேர்கள் என்பதாலும் நிறைய கதைகளை மிகவும் அருகில் உணர முடிந்தது. பெரும்பாலும் இந்தப் பகுதிகளில்தான் இவரது கதைகள் சுற்றி வருகின்றன.

முதல் கதையான “சாவதும் ஒரு கலை” படித்து முடிக்கும்போதே நம்மை நிமிர்த்தி உட்கார வைத்து விடும். அந்தப் பெண் இறந்தாளா இல்லையா என்பதற்கான முடிவை நாம் தட்டுத் தடுமாறி எடுக்க வேண்டி இருக்கிறது. கதைகள் ஒரு எள்ளலான நகைச்சுவை உணர்வோடு சுண்டி இழுக்கும் ஒரு நடையில் இருக்கின்றன. வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் செல்லும் சம்பவங்களில் நம் முகத்தில் ஒரு சிறு புன்னகையைப் படர விடும் வேளையில் நம் புன்னகையை உறையவைக்கும் முடிவொன்றை நம் முகத்தில் அடிக்கும் கதைகளும் உண்டு. இதனால் சற்றே சிரிக்க வைக்கும் கதைகளையும் கொஞ்சம் எச்சரிக்கையாகவே அணுக வேண்டி இருக்கிறது. “நந்தினியின் வீட்டில் விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது” இந்த வகையைச் சேர்ந்த கதைதான்.

அடுத்ததாக துலுக்கன் கதை. அந்த மதத்தைச் சேர்ந்த யாரும் இல்லாவிட்டாலும் எதற்கு அந்தப் பெயர் என்ற கேள்விக்கு அதனால்தான் அந்தப் பெயர் என்ற விடையாக கதை அவிழ்வது அபாரம். அசைவுறாக் காலம் கதை நம்மை அசைத்துப் பார்க்கும் ரகம். தூர்தர்ஷன் பாத்திமா பாபுவில் தொடங்கி, ஜெயா டிவி பாத்திமா பாபுவில் முடிவடைவது அழகான ஒரு காலத்தின் குறியீடு.

ஒரு குழந்தை அழுது கொண்டிருக்கிறது என்ற கதை நம்மை சற்றே சில்லிட வைக்கும். அறியாத மனிதர்களுக்கு எங்கோ கொடுமைகள் நடக்கையில் நாம் பெரிதாக அலட்டிக் கொல்வதில்லை, ஆனால் அதுவே நாம் அறிந்தவர்களுக்கு நடக்கும்போது பதறுவது மனித இயல்பு. கடைசியாக முடிக்கும் போது புதரில் இறந்து கிடந்த குழந்தை கதையில் வந்த குழந்தையாக இருக்குமோ என்ற கேள்வியை நம் மனதில் ஏற்படுத்திவிட்டுப் பிறகு அது எந்தக் குழந்தையாக இருந்தால் என்ன? பத்து மாதக் குழந்தை புதருக்குள் எறும்பு தின்னக் கிடந்தால் வேதனைப்படுவதை விட்டு என்ன ஆராய்ச்சி வேண்டி இருக்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறார். இது நுட்பமானது.

படிப்பவர்களை சிரமப்படுத்தாத நட்பான ஒரு எழுத்து நடை இவருக்கு இயல்பாகவே வாய்த்திருக்கிறது. இது அவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு. இது வெறும் ஆரம்பமே என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

நன்றி,  ஷான் ( https://www.facebook.com/photo.php?fbid=10152580341789546&set=a.127846894545.130400.528129545 )

இணையத்தில் வாங்க...


கம்யூனிசப் புத்தகங்கள்

நான் வாசித்த மூன்று கம்யூனிச நூல்களை பார்ப்பதற்கு முன்பு கம்யூனிசத்தைப் பற்றி எனது கருத்தை தெளிவாகத் தெரிவித்துவிடுகிறேன்.

கம்யூனிசம் – நல்ல சித்தாந்தம். ஆனால், காலத்துக்கு காலம், இடத்துக்கு இடம், மக்கள் மனநிலைக்கு மனநிலை மாறுபட வேண்டும். கருத்துக்களும், சிந்தாந்தங்களும் புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். நூற்றி ஐம்பது வருடங்களாக ஒரே விஷயத்தை பின்பற்றினால், பேசினால் அது பழமைவாதமாக மாறிவிடும். எக்ஸ்பையரி டேட் ஓட்டி தூக்கி எறிந்திவிடுவார்கள்.

இன்று, கம்யூனிசம் தவறான புரிதலுக்கு காரணமே காலத்திற்கு தகுந்தாற் போல் மாற்றிக் கொள்ளாமல் கண்முடித்தனமாக பின்ப்பற்றுவதும், பேசுவதும் தான். ‘கம்போடியா இனப்படுகொலை’ காரணமே கம்யூனிசத்தின் தவறான புரிதல் என்று சொல்லலாம். சில சமயம் எனக்கே என் புரிதல் மீது இந்த சந்தேகம் உண்டு. ‘கம்யூனிசத்தில் அதிகம் ஆர்வமில்லை என்பதால் அதைப் பற்றி அழமாகப் புரிந்துக் கொள்ள முயற்சிகள் எடுக்கவில்லை.

Aravindan Neelakandan யின் “ பஞ்சம்,படுகொலை,பேரழிவு, கம்யூனிஸம்” முழுக்க முழுக்க கம்யூனிசத்திற்கு எதிரான நூல். கம்யூனிசத்திற்கு எதிரான பல கருத்துக்களை கூறியிருக்கிறார். நான் எழுதிய ‘உலகை உறையவைத்த இனப்படுகொலைகள்” நூலுக்கு இதில் இருக்கும் சில தகவல்கள் எனக்கு உதவியாகவும் இருந்திருக்கிறது. கம்யூனிசத்திற்கு எதிராக தமிழில் இதுப் போல் நூல் வந்ததில்லை என்று சொல்லலாம்.

பல எதிர்வினைகள் கம்யூனிசவாதிகளிடம் இருந்து வந்திருக்க வேண்டும். கிழக்கு பதிப்பகத்திற்கு எதிராகத் தான் கருத்துக்கள் இருந்தது. என்னால் எடுத்தோம், முடித்தோம் என்பது போல் இந்த நூலை படிக்க முடியவில்லை. கம்யூனிசத்திற்கு எதிராக பிரச்சாரமாக தெரிந்ததால் என்னவோ படிக்கும் போது சோர்வு ஏற்ப்பட்டது. தேவையான தகவல் பகுதியை மட்டும் படித்தேன். 

இதே உணர்வு தோழர் இரா. ஜவஹரின் ‘கம்யூனிசம் : நேற்று இன்று நாளை’ (நக்கீரன் வெளியீடு) புத்தகத்தை படிக்கும் போது தோன்றியது. கம்யூனிசத்திற்கு ஆதரவான நூல். கம்யூனிசத்தைப் பற்றி எண்ணற்ற தகவல், விளக்கங்கள் கொடுத்திருக்கிறார். ஆனால், எனக்கு பாடப்புத்தகமாகவே தெரிந்தது. இரண்டு வருடங்களாகியும் இன்னும் முடிக்கவில்லை. படித்து முடிக்க வேண்டும் புத்தக அடுக்கில் இன்னும் என் மேஜை மீது இருக்கிறது. 

இந்த புத்தகக் கண்காட்சியில் Marudhan Gangadharan எழுதிய “உலகை மாற்றிய புரட்சியாளர்கள் என்ற நூலை வாங்கினேன். ஸ்பார்டகஸ், சிமோன் பொலிவார் போன்றவர்களைப் பற்றி தமிழ் நூல்களில் அதிகக் குறிப்புகள் இல்லை. அந்த நூல்களில் அவர்களைப் பற்றி குறிப்புகள் மட்டுமில்லாமல், அவர்களைப் பற்றி சிறு ஆய்வு கட்டுரையும் இருக்கிறது. ஆனால், எனக்கு அதே சோர்வை கொடுக்கிறது.

பிடல் காஸ்ட்ரோ, யூகோ சாவேஸ், சே போன்றவர்களில் வாழ்க்கை வரலாற்றை மருதன் எழுதியதை படித்திருக்கிறேன். அதிகப்பட்சமாக இரண்டு நாட்களில் படித்து முடித்திருக்கிறேன். ஆனால், இந்த புத்தகத்தில் “மார்க்ஸியம்” பற்றிய கட்டுரைக்கு பிறகு மேலும் படிக்க தோன்றவில்லை. (அடுத்த இரண்டு நாளில் இந்த நூலை படித்து முடித்துவிடுவேன்).

என் வாசிப்பு தொடங்கிய புதிதில் கம்யூனிசத்தைப் பற்றி பெரிய கருத்து இல்லையென்றாலும் அதைப் பற்றி படிக்க ஆர்வமிருந்தது. இந்த பிரிவு சம்பந்தப்பட்ட நூல்கள் வேண்டாம் என்று ஒதுக்கியதில்லை. கம்யூனிசத்திற்கு சாதகமான நூலும், எதிரான நூலும் எனக்கு ஏன் சோர்வை தந்தது என்று புரியவில்லை.

ஒரு முறை கண்ணதாசன், “ பதினெட்டு வயதுக்கு மேல் கம்யூனிசத்தை ஏற்றவன் முப்பது வயதுக்கு மேல் அதில் இருந்து வந்துவிட வேண்டும். ” என்ற கூறியிருக்கிறார். வயதும், மனதும் அப்படிக் காரணமாக இருக்குமோ என்றுக் கூட தோன்றியது.

ஒரு வேளை தொடராக வந்ததை புத்தகமாக தொகுத்ததால் அப்படி இருக்கலாம்.

மேல் குறிப்பிட்ட மூன்று நூல்களுமே மிக முக்கியமான நூல்கள். சந்தேகமில்லை. இந்த புத்தகக் கண்காட்சியில் கம்யூனிசத்தைப் பற்றி தெரிந்துக் கொள்ள விரும்புபவர்கள் இந்த நூல்களை வாங்கலாம். -

நன்றி : குகன் (https://www.facebook.com/tmguhan)

Friday, 10 January 2014

கர்ணனின் கவசம் - கே.என்.சிவராமன்

சுவாரஸ்யம் மட்டுமே குறிக்கோளாக மனதில் வைத்து எழுதப்பட்ட நாவல்.

மகாபாரத பாத்திரங்களோடு சரித்திர பாத்திரங்கள் சேர்ந்து இந்த நாவலில் வருகிறார்கள். இது உண்மையா ? பொய்யா ? என்ற கேள்வி கேட்டாமல் கடந்து விடுகிறோம்.

இது ஒரு Magical Fiction வகை நாவல் என்பதால் கிருஷ்ணரும் துணை பாத்திரமாக வருகிறார். பகுத்தறிவுக்கு விடைக் கொடுத்து விட்டு லாஜிக் பார்க்காமல் வாசிக்கவும். எல்லா பாத்திரங்களும் கர்ணனின் கவசத்தை நோக்கி தான் பயணிக்கிறது.

இதில் யார் நல்லவர் கெட்டவர் என்பதை பிரிப்பது கடினமான விஷயம். எல்லா பாத்திரங்களுமே சமமாக கையாளப்படுவதால் இவர் தான் நாயகன், நாயகி என்று சொல்லிவிட முடியவில்லை. தாராவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டாலும், அவர் தான் நாவலில் நாயகி என்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை. யார் என்ன சொன்னாலும் கேட்கும் பாத்திரமாகவே வருகிறார். இந்த நாவலில் அநியாயத்திற்கு அதிக பாத்திரங்கள். கொஞ்சமாவது மகாபாரதம் தெரிந்தவர்களால் மட்டுமே பாத்திரங்களை புரிந்துக் கொள்ள முடியும்.

 “போதிதர்மரோட ஒண்ணு விட்ட தம்பியோட பரம்பரைல வந்தவன் தான் வஜ்ஜிரபாகு. போதிதர்மரோட பங்காளிங்க என் மகன் கர்ணன் சேர்ந்து வித்தை கத்துக்கிட்டாங்க…” – இது போன்ற பக்கத்துக்கு ஒரு முறையாவது சரித்திரத்தையோ, மகாபாரதத்தையோ சொல்லுவது கொஞ்சம் அலுப்புட்டுகிறது.

பல பாத்திரங்கள் ”இங்கு தான் இருக்க வேண்டும்”, “இப்படி தான் நினைக்கிறேன்” என்ற அடிப்படையிலே அடுத்த கட்டத்தை நோக்கி செல்கிறார்கள். அவர்களுக்கான புத்திசாலித் தனம் தெரியவில்லை. ஒரு இடத்தில் மட்டும் ஃபிபொனசி தியரி மூலம் தடையை கடப்பதை கதாபாத்திரங்கள் ஆதித்யா புத்திசாலி தனம் தெரிகிறது. மற்ற இடங்களில் எல்லாம் மந்திரம், தந்திரம் தான் காப்பாற்றுகிறது.

ஒரு முடிச்சு அவிழ்ந்தது என்று நினைக்கும் போது, ‘இல்லை’ அது ஒரு Backup என்று கூறி மீண்டும் அந்த முடிச்சு இருப்பதாக சொல்கிறார். சுவாரஸ்யத்திற்காக நாவலில் முடிச்சுகள் இருப்பது சிறப்பு தான். ஆனால், பக்கத்துக்கு பக்கம் ஏகப்பட்ட முடிச்சுகள். படித்து முடித்த பிறகு அத்தனை முடிச்சுகளும் அவிழ்ந்ததா என்று தெரியவில்லை.

 இந்த நாவலை முடிக்கும் போது அவசர அவசரமாக முடித்திருக்கிறாரோ என்ற உணர்வு வருவதை தவிர்க்க முடியவில்லை.

”இன்றைய தேவை தமிழில் ஒரு டேன் பிரவுன்” என்று ஜெயமோகன் கூறியது போல், கே.என்.சிவராமன் தமிழில் டேன் பிரவுனாக வளம் வருவார் என்பதற்கு இந்த நாவல் அச்சாராம். வாழ்த்துக்கள் சிவராமன் !!!

இணையத்தில் வாங்க....
http://www.wecanshopping.com/products/கர்ணனின்-கவசம்.html

நன்றி
http://guhankatturai.blogspot.in/2014/01/blog-post.html